இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைப் போலவே, உலகின் பல்வேறு நாடுகளும் டி20 தொடர்களை நடத்திவருகின்றன. அந்த வகையில் நமது அண்டைநாடான பாகிஸ்தானும், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற டி20 தொடரை நடத்திவருகிறது. இத்தொடரின் ஐந்தாவது சீசன் நேற்று முந்தினம் முதல் தொடங்கியது.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இதில் டாஸ் வென்ற ஸால்மி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஷேன் வாட்சன் களமிறங்கினர். இதில் வாட்சன் எட்டு ரன்களில் வெளியேற, ராய் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அரைசதம் கடந்தார்.
பின்னர் ராயுடன் ஜோடி சேர்ந்த கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டன் ஷர்ப்ராஸ் அஹ்மத் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ஜேசன் ராய் 73 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸால்மி அணியின் தொடக்க வீரர் டாம் பாண்டன் மூன்று ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் களமிறங்கிய தொடக்க வீரர் கம்ரான் அக்மல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் மூலைமுடுக்கெல்லாம் பறக்க விட்டார்.
இதன் மூலம் அக்மல் 55 பந்துகளில் சதமடித்து, பிஎஸ்எல் டி20 தொடரில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் ஸால்மி அணி 18.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கையடைந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த கம்ரான் அக்மல் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சோபி டிவைன் அதிரடியில் இலங்கையைப் பந்தாடிய நியூசிலாந்து!