ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விராட் கோலியின் விக்கெட்டை ஏழு முறைக் கைப்பற்றி ரசிகர்களை வியக்க வைத்தவர் ஆடம் ஸாம்பா. ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் சுழற்பந்து வீச்சாளராக மக்களால் அறியப்பட்டு வரும் இவர், விரைவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆடுவதே தனது குறிக்கோள் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆடம் ஸாம்பா பேசுகையில், ''ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே எனது முக்கிய குறிக்கோள். கடந்த சில ஆண்டுகளில் எனது செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது, என்னை ஒருநாள் அணியின் வீரர் என முத்திரை குத்தப்பட்டுள்ளேன். அதனால் முதல்தர போட்டிகளில் ஆடுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக கிடைத்தன. ஆனால் இந்த சில ஆண்டுகளில் பந்துவீச்சாளராக முன்னேற்றமடைந்துள்ளேன். விரைவில் அந்த பேகி கிரீன் தொப்பியை வாங்குவேன்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினேன் என்பதற்காக எனக்கு எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளில் நாதன் லயன் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. துணை கண்டங்களில் ஆடும் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன'' என்றார்.
இதையும் படிங்க: தோனியால் ஸ்பெஷலான எனது டெஸ்ட் அறிமுகம் - கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி!