இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கங்குலி. 2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு கொண்டு சென்ற இவர், பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் வருகைக்கு பிறகு 2005இல் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அதன்பிறகு 2006, 2007இல் கம்பேக் தந்து அதிகமான ரன்களை அடித்து இருந்தாலும் அதன்பிறகு அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 2007இல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இவர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து இவர் 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பிசிசிஐயின் தலைவராக விளங்கும் இவர் தனது கடைசி கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் மனம் திறந்து பேசிய அவர்,
"2007இல் அதிக ரன்களை அடித்து இருந்தபோதும் நான் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டேன்.இதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை அடுத்த இரண்டு ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்ட இருந்தால் நான் இன்னும் அதிக ரன்களை குவித்திருப்பேன்.
அதேபோல் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் அடுத்த இரண்டு டெஸ்ட் தொடரில் நான் சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் எடுத்திருப்பேன்.
இப்போது கூட எனக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்க நேரம் வந்தால் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடி டெஸ்டில் இந்தியாவுக்காக ரன்களை அடிக்க முடியும். இதற்கு ஆறு மாதம் கூட வேண்டாம், மூன்று மாதம் தந்தால் மட்டுமே போதும். அப்போதும் என்னால் ரன்களை அடிக்க முடியும்.
நீங்கள் எனக்கு வாய்ப்பை வழங்காமல் இருக்கலாம், ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைப்பீர்கள்?" என்று கேள்வியை எழுப்பி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.