நடப்பாண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய போட்டியில் பெங்கால் அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
இதையடுத்து அந்த அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மனோஜ் திவாரி முற்சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு பெங்கால் அணிக்காக முச்சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார். மேலும் பெங்கால் அணி தனது முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 635 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இன்னிங்ஸ், 303 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக முச்சதமடித்து அசத்திய மனோஜ் திவாரி தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தப்போட்டியில் பெங்கால் அணியின் ஆல்ரவுண்டர் ஷாபாஷ் அகமது, ஹைதராபாத் அணியின் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அகமது, 'ரவீந்திர ஜடேஜா இந்தியாவுக்காக விளையாடும் விதத்தை நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் பெங்கால் அணிக்கு நான் ஜடேஜாவாக இருக்க விரும்புகிறேன்' எனத் தெரிவித்தார்.
தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அகமது, உடைமாற்றும் அறையை விராட் கோலியுடன் பகிர்ந்துகொள்வதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும் இது தனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெங்கால் ரஞ்சி அணிக்காக விளையாடிவரும் அகமது, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் அவரின் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டூ பிளஸ்ஸிஸ் நீக்கம்: புதிய கேப்டன் நியமனம்