இந்தியாவில் நடத்தப்படும் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாட்டு அணி ராஜஸ்தான், பெங்கால், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சர்வீசஸ், மத்திய பிரேதசம், குஜராத், பீஹார் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதில், முதலில் 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது அணியிலிருந்து நீ்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற விஜய் சங்கர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அணியின் விவரம்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), அபிநவ் முகுந்த், வாஷிங்டன் சுந்தர், பாபா அபாரஜித், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், என். ஜெகதீசன், நடராஜன், கே விக்னேஷ், எம். முகமது, எம். சித்தார்த், அபிஷேக் தன்வார், சி. ஹரி நிஷாந்த், ஜே. கவுசிக்