கரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் மார்ச் மாதம் முதல் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் அடங்கும். மேலும் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் குறித்த முடிவை ஐசிசி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் கோவிட் -19 பெருந்தொற்றின் அசுறுத்தல் காரணமாக ஒன்பதாவது சீசன் உலகக் கோப்பை லீக் 2 மற்றும் இரண்டாவது உலகக் கோப்பை சேலஞ்ச் லீக் 'பி' ஆகிய தொடர்களை ஒத்திவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.சி.சி நிகழ்வுகளின் தலைவர் கிறிஸ் டெட்லி கூறுகையில், கோவிட்-19 பெருந்தோற்று காரணமாக சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய சுகாதாரக் கவலைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதால், 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான மேலும் இரண்டு கிரிக்கெட் தகுதித் தொடர்களை ஒத்திவைக்க உறுப்பினர்களுடன் இணைந்து நாங்கள் முடிவு செய்துள்ளோம். வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதே ஐ.சி.சியின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.