கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஒத்திவைத்த பிசிசிஐ, ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது.
இந்நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறவும், பார்வையாளர்களின்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் பார்வையாளர்களின்றி கோவாவில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான முஷ்டாக் அலி தொடர் வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இத்தொடரிலிருந்து மற்ற அனைத்து உள்ளூர் தொடர்களையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜெய் ஷா, “முஷ்டாக் அலி தொடரை தொடர்ந்து மற்ற உள்ளூர் தொடர்களை நடத்துவது குறித்து பிசிசிஐ உறுப்பினர்களிடம் ஆலோசித்து வருகிறோம். மேலும் இத்தொடரின் போது, மற்ற உள்ளூர் தொடர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் அதற்கேற்றால் போல் மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்கள் மற்றும் அட்டவணை ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: பிளேயிங் லெவனை தேர்வு செய்த வார்னே!