இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஆடி வந்தார். இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஸ்ரீசாந்த் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்தது.
பின்னர் தன் மீதுள்ள வாழ்நாள் தடையை நீக்க கோரி ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் அவர் மீதான தடையை ரத்து செய்தது. அதன்பின் பிசிசிஐ சார்பில் கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை தொடரும் என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம். ஜோசப் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அவர்கள் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டனர். மேலும், அவருக்கு புதிதாக என்ன தண்டனை கொடுக்கலாம் என்பது குறித்து பிசிசிஐ மூன்று மாதங்களுக்குள்மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கினர்.