இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியதிலிருந்து கோலியின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன. அரையிறுதிப் போட்டிவரை நான்காவது இடத்திற்கான வீரரை தேர்வு செய்யாமல் ஒவ்வொருவரையும் பரிசோதனை மட்டுமே கோலி செய்து வந்தார் போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறினர்.
இதனால், இந்திய அணி நாடு திரும்பியதும் தோல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அப்படி ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. மாறாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு கோலியே மூன்று வடிவ (டி20,டெஸ்ட்,ஒருநாள் தொடர்) அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பல முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கோலியை மீண்டும் கேப்டனாக்கியது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், ”தற்போது உள்ள தேர்வுக் குழு ‘நொண்டி வாத்தை’ போல் செயல்படுகிறது. ஏனென்றால், உலகக்கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக ஆடாத காரணத்தினால் கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு நீக்கியுள்ளனர். அதேபோல், உலகக்கோப்பையை வெல்ல முடியாத கோலியை கேப்டன் பொறுப்பை விட்டு ஏன் நீக்கவில்லை.
எனக்குத் தெரிந்த வரையில் கோலியின் பதவிக்காலம் உலகக்கோப்பை வரைதான் இருந்தது. ஆனால், அவருடைய கேப்டன்சி குறித்து ஆராயாமல் மீண்டும் கேப்டனாக நியமித்துள்ளார்கள். கோலி தேர்வுக் குழுவின் விருப்பத்தின்பேரில் கேப்டனாக உள்ளாரா? இல்லை தன் விருப்பத்துக்காக கேப்டனாக உள்ளாரா? தோல்வி குறித்து ஆராய ஆலோசனைக் கூட்டம் நடத்தாமல் அடுத்த தொடருக்கு அணியைத் தேர்வு செய்துள்ளது ஏற்புடையதல்ல“ என்றார்.