இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த போட்டியின் போது 50 விழுக்காடு ரசிகர்களை மைதானத்திற்குள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (பிப்.15) உணவு இடைவேளைக்குப் பின் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி கிரிக்கெட் வீரர்களை பார்க்க அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அந்நபரை கைது செய்து, திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்த ரசிகரிடம் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கம் திருப்பதி தெருவை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் என்பது தெரியவந்தது. மேலும் கிரிக்கெட் வீரர்களை அருகிலிருந்து பார்க்க ஆசைப்பட்டு தடுப்பு வேலியை தாண்டி சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து மாணவரின் பெற்றோரை காவல்துறையினர் அழைத்து, மாணவரை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: அஸ்வின் அபார சதம், இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு!