கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த பல்வேறு வகையான விளையாட்டு தொடர்கள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், சமூகவலைதள நேரலையில் பங்கேற்று தமது அணி வீரர்கள்களுடன் இணைந்து விளையாடியது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிராட், "நான் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடும்போது, கிடைக்கும் நேரங்களில் அணி வீரர்களுடன் சேர்ந்து வீடியோ கேம் விளையாடுவதை மிகவும் விரும்புவேன். அதிலும் குறிப்பாக ஃபிபா, ஃபார்முலா ஒன், கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும்.
அதேபோல், நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் நேரங்களில் ஜோஃப்ரா ஆர்ச்சருடன் வீடியோ கேம் விளையாடிய தருணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதனால் நான் அவருக்கு மகுடம் சூட்டினாலும் தப்பில்லை. அவர் இல்லையென்றால் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை.
மேலும், எங்களது அணியில் சிறந்த கேட்சுகளை பிடிக்கும் வீரராக பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்வேன். அதுவும் அவர் 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின்போது தொடர்ச்சியாக அபாரமான கேட்சுகளை பிடித்து அசத்தினார். அதேபோல் அவர் பிடித்ததில் சிறந்த கேட்ச் எதுவென்றால், கடந்த உலகக்கோப்பை தொடரின்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிராக பிடித்தது தான்.
இந்த ஊரடங்கு காலத்தில் நான் வெவ்வேறு வகையான விளையாட்டு ஆவணப்படங்களை கண்டுகளித்துள்ளேன். அதேபோல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.