உலகின் பிரபலமான தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் மூன்று விக்கெட்களை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நான்காம் நாள் ஆட்டத்தில் ஸ்மித் - ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏற்கனவே இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் காயம் காரணமாக பந்துவீசாத நிலையில், இன்றைய நாளில் கிறிஸ் வோக்ஸும் பந்துவீசாமல் இருந்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய இணை எவ்வித பதட்டமுமின்றி ரன்களை சேர்த்தனர். இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு 130ரன்கள் சேர்த்த நிலையில், ட்ராவிஸ் ஹெட் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஸ்மித்துடன் இணைந்தார் மேத்யூ வேட். இதனையடுத்து ஆட்டத்தின் முழுமையாக ஸ்மித் தனதாக்கிக் கொண்டார். இவரை ஆட்டமிழக்க செய்யமுடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். விரைவாக ரன்களை குவிக்கத் தொடங்கிய ஸ்மித், இந்த ஆட்டத்தின் இரண்டாது சதத்தையும் பதிவு செய்தார்.
கடந்த ஒரு ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆஷஸ் தொடரில் ஆடிய முதல் போட்டியிலேயே இரண்டு சதங்கள் விளாசியதன் மூலம் திரும்பி வந்துட்டேனு சொல்லு என கபாலி ஸ்டைலில் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இந்த சதத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 25ஆவது சதத்தைப் பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தின் ஆவரேஜ் 63ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 148 ரன்கள் முன்னிலையுடன் 248 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் 108 ரன்களுடன் களத்தில் உள்ளார்.