இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் நான்காம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி மூன்றுநாள் பயிற்சி போட்டியில் டெர்பிஷையர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமல் இருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இப்போட்டியில் களமிறங்கினார். இதையடுத்து, டெர்பிஷையர் அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க், மைக்கேல் நேசர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
![md'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4300893_smith.jpg)
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 92 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மிகவும் எதிர்பார்த்த ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் மார்ஷ் 74, உஸ்மான் கவாஜா 72, மார்கஸ் ஹாரிஸ் 64 ரன்கள் அடித்தனர்.
இதனால் 166 ரன்கள் பின்தங்கிய டெர்பிஷையர் அணி, தனது இரண்டாவது இன்னிங்சிலும் 112 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.