142 ஆண்டு பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களின் எண் பொறித்த ஜெர்சி போன்று பல்வேறு புதிய விதிமுறைகளை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அந்தவகையில், போட்டியின்போது ஏதெனும் ஒரு வீரருக்கு அடிப்பட்டால் அவருக்கு பதிலாக அந்த அணி சப்ஸ்டிட்யூட் வீரருடன் விளையாடலாம் என்று அறிவித்தது.
முன்னதாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதும் அவர்கள் அணியின் தேவைக்காக, வலியை பொருட்படுத்தாமல் விளையாடினர். இதனால், ஐசிசியின் இந்த புதிய விதிமுறை பல்வேறு அணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், முதல் இன்னிங்ஸின்போது இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆர்ச்சர் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கழுத்தைத் தாக்கியது. இதனால், 80 ரன்களுடன் Retired Hurt முறையில் பெவிலியனுக்குத் திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். இறுதியில் அவர் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இப்போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணி 267 ரன்களை டார்கெட் செட் செய்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்றுவீரராக மார்னஸ் லாபுக்ஸாக்னே நான்காவது வரிசையில் களமிறங்கினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாற்றுவீரராக களமிறங்கி விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை மார்னஸ் படைத்துள்ளார். சற்றுமுன்வரை ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் லாபுக்ஸாக்னே 59 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 35 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றார்.