இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே இலங்கை அணியின் மலிங்கா, மாத்யூஸ், தினேஷ் சந்திமால் உள்ளிட்ட 10 அனுபவ வீரர்கள் பாதுகாப்புக் காரணங்களை கருத்தில் கொண்டு தாங்கள் இந்தத் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர்.
இதனையடுத்து இலங்கை அணி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனைக்குப்பின் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் மோகன் டி சில்வா, பாகிஸ்தான் சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பார்வையிட்டார். அப்போது பாகிஸ்தான் அரசு, வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதியளித்தது. மேலும் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், இன்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி பங்கேற்பது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அணிக்கான அச்சுறுத்தல் இல்லை என்பதை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்ததாலும் இந்த தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கராச்சியில் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக இலங்கை அணி கடந்த 2009ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, லாகூர் கிரிக்கெட் மைதானம் அருகே வைத்து அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலையடுத்து, அந்நாட்டில் எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தொடர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே நடைபெற்றுவந்தன.
இதற்கிடையே 2015ஆம் ஆண்டு ஜிம்பாபே அணியும், 2017ஆம் ஆண்டு ஒரே ஒரு டி20 போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்க பாகிஸ்தானுக்குப் போக மாட்டோம்... இலங்கை வீரர்கள் திட்டவட்டம்