தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 3-1 என தென் ஆப்பிரிக்கா இழந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.
இந்த ஒருநாள் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் புதிய கேப்டனாக டி காக் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் டி காக்கின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற டி காக், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியிலன் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 32 ரன்களிலும் பெயர்ஸ்டோவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் மோர்கன் - ஜோர் ரூட் இணை ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி 83 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதையடுத்து கடைசியாக ஜோ டென்லி - கிறிஸ் வோக்ஸ் இணை 7ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது. இறுதியாக, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் - ஹென்ரிக்ஸ் தொடக்கம் கொடுத்தனர். அதில் ஹென்ரிக்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, டி காக் - பவுமா ஜோடி இணைந்து இங்கிலாந்து அணியின் பந்துகளை எளிதாகச் சமாளித்தது. இந்த இணை ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை விளாசி, ப்ரஸர் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. 20ஆவது ஓவரின்போது டி காக் தனது அரைசதத்தைக் கடந்தார்.
தொடர்ந்து நிதானமாக ஆடிய இந்த இணை 25 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. பின்னர் பவுமா அரைசதத்தைக் கடக்க, பதிலுக்கு டி காக் ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் கடந்ததோடு, தனது 15ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
இதன்பின் டி காக் 107 ரன்களுக்கும் பவுமா 98 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, வாண்டர் டூசன் - ஸ்மட்ஸ் இணை இறுதிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டியது. இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 47.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க: சாய்னா நோவால்... சாஹல் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல்