பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனாக பாபர் அசாம் திகழ்கிறார். தனது சிறப்பான பேட்டிங் மூலம் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளால்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் சோமர்செட் அணி தனது முதல் போட்டியில் கிளமோர்கன் அணியை எதிர்கொண்டது.
பொதுவாக, சோமர்செட் அணி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் போட்டியை நேரலையாக ஒளிப்பரப்பும். அந்த வகையில் இப்போட்டியில், தங்களது அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாமின் ஆட்டத்தைக் காண பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் சோமர்செட் அணியின் இணையதளத்தில் சென்று பார்வையிட்டனர்.
இதனால், சோமர்செட் அணியின் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. பாகிஸ்தான் ரசிகர்களின் ஆர்வத்தால்தான் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், சோமர்செட் அணியின் இணையதளதம் அந்த அணியின் டிஜிட்டர் மார்க்கெட்டிங் தலைவர் பென் வாரனால் மேம்படுத்தப்பட்டது.
இதனிடையே, சோமர்செட் அணி, சுசெக்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியை 15லட்சம் ரசிகர்கள் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். அப்போட்டியில் பாபர் அசாம் 83 ரன்கள் அடித்தார். அவர் அந்த தொடரில் விளையாடிய, ஆறு போட்டிகளில் இதுவரை 267 ரன்கள் எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர் அடுத்து நடைபெறவுள்ள கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியிலும், சோமர்செட் அணிக்காக விளையாடவுள்ளார். 24 வயதான பாபர் அசாம், உலகக்கோப்பையில் 474 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.