ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், 2-1 ஒன்று என்ற கணக்கில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி-20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் முதல் முறையாக பகலிரவு போட்டியில் எதிர்கொள்கின்றனர். சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அடிலெய்டில் நடைபெறும் பிங்க்-பால் பகலிரவு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
" டெஸ்ட் போட்டிக்குத் தயாராகும்போதுகூட, மனத்தை நிதானப்படுத்தி கிரிக்கெட்டைத் தவிர மாற்ற விஷயத்தில் ஈடுபட்டு ஓய்வெடுப்பது அவசியம். ஆனால், இந்தியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போன்ற சிந்தனையை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு நான் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு சதங்களுடன் 216 ரன்களை எடுத்தார். தவிர்க்க முடியாத முன்னணி வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: ஜன.10 முதல் முஷ்டாக் அலி தொடர் - பிசிசிஐ அறிவிப்பு!