இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று கொழும்புவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸை வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது.
இதனையடுத்து, பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சியளிக்கும்விதத்தில் சுனில் ஆம்ரிஸ் மூன்று ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான ஷாய் ஹொப் அதிரடியாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உதானா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி ஹோப் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் இஷ்ரூ உதனால் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைத் தந்து அணிக்குச் சரியாக அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதமடித்த நிலையில் ஃபெர்னாண்டோ 50 ரன்களிலும் கருணரத்னே 52 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில், குசால் பெரேரா 42 ரன்களும், திசாரா பெரேரா 42 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் வெற்றி யார் பக்கம் என்று தீர்மானிக்க ஆட்டம் இறுதி ஓவர்வரை சென்றது. பின் 49.1 ஓவர்களின் நியூசிலாந்து அணி 290 ரன்களை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.
மேலும் இந்த ஆட்டத்தில், இலங்கை அணியை இறுதிவரை போராடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற வானிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 26ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதையும் படிங்க:எர்வின் சதத்தால் நிலைத்த ஜிம்பாப்வே: பேட்ஸ்மேன்களை அலறவிட்ட நயீம்