டெல்லி: தோனி ஓய்வு பெறுவது குறித்து நாளுக்கு நாள் விவாதிக்கப்பட்டு வருவதால் அவரும், தேர்வுகுழுவும் பரஸ்பரம் பேசி முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வீரந்தர் சேவாக் பேட்டி ஒன்றில் கூறியதாவது,
ஓய்வு பெறுவது குறித்து தோனிதான் முடிவு செய்ய வேண்டும். முழு உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் நினைத்தால் தொடர்ந்து விளையாடலாம்.
அதேசமயம் தேர்வுக் குழுவினருக்கு அவரது உடல்தகுதி குறித்து சந்தேகம் இருந்தால், கடைசி தொடர் விளையாடுவதற்கான வாய்ப்பு குறித்து பேசிவிட வேண்டும்.
வீரரும், தேர்வுக்குழுவினரும் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தோனி ஓய்வு பெறுவது குறித்து நாள்தோறும் விவாதிக்கப்பட்டு வருவதுடன், தேர்வுக் குழுத்தலைவர் தோனியை முதல் தேர்வாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தகவல்களே வெளியாகின்றன.
ஒரு வேளை விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பந்த் முதல் தேர்வாகவும், தோனி இரண்டாவது தேர்வாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.
எனவே ஒரு கட்டத்தில் எப்போது ஓய்வு பெறலாம் என்பது குறித்து முடிவெடுத்து, தனது கடைசி போட்டி குறித்து தேர்வுக்குழுவிடம் தோனி பேசிவிட வேண்டும்.
என்னை அணியிலிருந்து நீக்கிய பின் நான் ஓய்வு பெறுவது பற்றி பேசாமல் இருந்தேன். மேலும் தேர்வுக்குழுவினரிடமும் தொடர்பு வைக்காமல் இருந்தேன்.
கிரிக்கெட் வாரியம் இதுபற்றி பேசும் என்று நினைக்காமல் தேர்வுக்குழுவினரும், வீரரும் பரஸ்பரம் பேசிக்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, 2013ஆம் ஆண்டு தோனி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த சேவாக் கழட்டிவிடப்பட்டார். அதன் பின்னர் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்படவே இல்லை.
இதனால் இந்திய அணியை தனது அதிரடியால் ஏராளமான போட்டிகளில் கரை சேர்த்த சேவாக்குக்கு கடைசி போட்டி விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.