பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சர்ஃபராஸ் அகமதுவை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கியது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், டி20 அணிக்கு பாபர் அசாமும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அதிரடியாக அறிவித்தது.
![sarfraz ahmed](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4432887_sarfraz-ahmed-.jpg)
சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 எனக் கைப்பற்றியது. ஆனால் அடுத்து நடைபெற்ற டி20 தொடரை அந்த அணி 0-3 என இலங்கையிடம் இழந்தது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பாகிஸ்தான் அணியின் இந்த தோல்வி பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இதன் காரணமாகவே சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது முதல் அந்த அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமது மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களைத் தொடுத்து சமூக வலைதளங்களில் கேலி செய்தனர்.
பின்னர் பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். தற்போது சர்ஃபராஸ் அகமதுவை நீக்கி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஒரு மாற்றம் செய்துள்ளது.
மேலும் அடுத்ததாக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 தொடர்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்ஃபராஸ் இடம்பெறமாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ஈஷன் மானி தெரிவித்தார்.
இதற்கிடையே சர்ஃபராஸ் அகமது மனைவி குஷ்பத் சர்ஃபராஸ் தனியார் செய்தி நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில், தனது கணவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், 'எனது கணவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தெரியும். ஆனால், இது அவருக்கான முடிவல்ல. ஏன் அவர் ஓய்வு பெற வேண்டும். அவருக்கு 32 வயது தான் ஆகிறது. தற்போது தோனிக்கு எத்தனை வயதாகிறது? அவர் என்ன ஓய்வு பெற்று விட்டாரா எனக் கேள்வியெழுப்பினார். மேலும் தனது கணவர் மீண்டும் அணிக்கு திரும்புவார்' என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
![sarfraz ahmed](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/sarfraz_1910newsroom_1571453435_1091.jpg)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் பல்வேறு காரணங்களால் அணியில் இடம்பெறாமல் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்தாலும் தோனி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். மேலும் சமீபத்தில் பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்திற்குப் பின் தோனி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்த சூழலில் சர்ஃபராஸ் அகமது மனைவியின் இந்த கேள்வி, கிரிக்கெட் விமர்சகர்களுக்குப் பேசு பொருளாக மாறியுள்ளது.