பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்க மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தனுஷ்கா குணதிலகாவின் சதத்தால் 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 297 ரன்களைக் குவித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் 76, அபித் அலி 74, ஹாரிஸ் சோஹைல் 56 என மேல்வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி 48.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து 299 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் களமிறங்கியதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் புதிய சாதனை பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் திகழும் சர்ஃபராஸ் அகமது இதுவரை 50 ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதன்மூலம் சர்ஃபராஸ் அகமது, 50 போட்டிகளுக்கு ஒரு அணியை தலைமை தாங்கிய விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் தோனிக்கு அடுத்தப்படியாக இணைந்துள்ளார். இதுவரை சர்ஃபராஸ் கான் 50 போட்டிகளில் தலைமை வகித்து 28 வெற்றி, 20 தோல்வி கண்டுள்ளார்.
இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் செயல்பட்ட தோனி 200 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை வகித்துள்ளார். அதில் 100 வெற்றி, 74 தோல்வி, ஐந்து சமனிலும் முடிந்துள்ளன. தோனியின் தலைமையின்கீழ் ஆடிய இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறது. தோனிக்கு அடுத்தப்படியாக சர்ஃபராஸ் கான் இடம்பிடித்தாலும் தோனியின் சாதனையை நெருங்குவது என்பது கடினமான ஒன்றே.
முன்னதாக இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இலங்கை வீரர் சேஹான் ஜெயசூர்யாவிற்கு மைதானத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டபோது சர்ஃபராஸ் கான் அவருக்கு உதவினார். அந்தக் காட்சி 2015ஆம் ஆண்டு இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மும்பையில் நடைபெற்ற போட்டியின்போது, தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர் டூபிளஸ்ஸிற்கு தோனி உதவிய நிகழ்வை ரசிகர்கள் பலரும் நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டனர்.