பஞ்சாப் மாநிலம் சாஹ்லான் (Sahlon) கிராமத்தைச் சேர்ந்தவர் பல்வீர் சந்த் (50). தனது பெயரால் இவர் அறியப்படாமல் இருக்கலாம், ஆனால் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினால் பல்வீர் சந்த் மிகவும் பிரபலமானவர்.
அதற்கு முக்கியக் காரணமே இவரது தோற்றம்தான். பார்ப்பதற்கு அச்சு அசல் சச்சின் டெண்டுல்கர் போலவே இவர் இருப்பதால் பலரும் இவரை பல்வீர் சந்துக்குப் பதிலாக இன்னொரு சச்சின் என்றுதான் அழைக்கின்றனர். சச்சின் தோற்றம் கொண்ட இவர் சச்சினின் தீவிர ரசிகர் ஆவார்.
1999இல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் சுனில் கவாஸ்கர் இவரை கமெண்ட்ரி பாக்ஸுக்கு அழைத்துள்ளார். அப்போதுதான் சச்சினை போலவே இப்படி ஒருவர் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.
அந்தப் போட்டி முடிந்தவுடன் இவர் சச்சினிடம் சென்று ஆறு புகைப்படங்களில் அவரது ஆட்டோகிராப்பை வாங்கியுள்ளார். அப்போது இந்தப் புகைப்படங்களில் இருப்பது நீங்கள் இல்லை இது நான் தான் என சச்சினிடம் இவர் கூறியுள்ளார். அதைப் பார்த்த சச்சின் செம ஷாக் ஆகியுள்ளார்.
சச்சினின் தோற்றம் கொண்டதால் பல விளம்பரப் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின் எம்ஆர்எஃப், ரெனால்ட்ஸ், டொஷிபா உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் ரியல் சச்சினும், ரீல் சச்சினும் ஒன்றாக நடித்துள்ளனர். பின்னர் மும்பையில் இயங்கும் துரித உணவுகளுக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார் பல்வீர் சந்த்.
இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பலரும் வேலைகளை இழந்தது போல இவரும் வேலையை இழந்தார். இதனால் தனது மனைவி 3 குழந்தைகளுடன் கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று மும்பையிலிருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது இவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், இவருக்கும் இவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர், "கையில் 15 பாட்டில் சானிடைசர், N95 மாஸ்க் உள்ளிட்ட முன்னெச்சரிக்கையுடன் தான் நாங்கள் மும்பையிலிருந்து புறப்பட்டோம்.
ஆனாலும்கூட சுற்றுப்பயணங்களில் சிலர் கவனக்குறைவுடன் இருக்கின்றனர். அதனால் என்னுடைய அனுபவத்தில் தற்போது வெளியே செல்வது மிகவும் ஆபத்தானது. தற்போதைய நிலைமை சீரான பிறகு மீண்டும் என்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தனர்" என்றார்.