தனது வேகப்பந்துவீச்சின் மூலம், எதிரணி ரசிகர்களையும் ரசிக்க செய்தவர் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின். இவரது வேகமான பந்துவீச்சினால், மைதானத்தில் பலமுறை ஸ்டெம்புகள் பறந்துள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும், இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். இப்படி பல வீரர்களை தனது பந்துவீச்சின் மூலம் கதிகலங்க செய்த இவர் நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின் மொத்தம் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில், குறப்பிட்ட சில வீரர்களின் பின்வருமாறு:
டி வில்லியர்ஸ்: (தென்னாப்பிரிக்கா)
ஸ்டெயினை குறித்து சொல்ல ஏராளமான நினைவுகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், இருவரும் ஒன்றாகதான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். அவர் தலைசிறந்த பந்துவீச்சாளராக மாறியதை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து. நீங்கள் எப்போதும் சிறந்த வீரரே.
டூப்ளெஸிஸ்: (தென்னாப்பிரிக்கா)
அவரது தலைமுறையில் சிறந்த வீரர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் படைத்த புள்ளி விவரங்கள் சிறந்தவை. டெஸ்ட் கிரிக்கெட் எந்த அளவிற்கு உங்களுக்கு பிடிக்கும் என்று நான் அறிவேன். இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்று இருந்தீர்கள். இனி வரும் நாட்களில் உங்களது வேகப்பந்துவீச்சு முறையை பார்த்து ரசிப்போம் என நம்புகிறேன்.
சச்சின் டெண்டுல்கர்: (இந்தியா)
ஸ்டெயின் உங்களது எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துகள். பேட்ஸ்மேனுக்கு சவால் தந்து அவர்களது சிறப்பான ஆட்டத்தை வெளிக் கொண்டுவந்துள்ளீர்கள். உங்களது பந்துவீச்சை பார்ப்பதிலும், அதை எதிர்த்து விளையாடியதிலும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
விராட் கோலி: (இந்தியா)
கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியன் ஸ்டெயின். வேகப்பந்துவீச்சில் மிஷினாக செயல்பட்ட உங்களது ஓய்வுக்கு வாழ்த்துகள்.
கெவின் பீட்டர்சன்: (இங்கிலாந்து)
இந்த நவீன கிரிக்கெட்டில் நீங்கள்தான் தலைசிறந்த பந்துவீச்சாளர். உங்களை எதிர்த்தும், உங்களுடன் சேர்ந்து விளையாடியதும் மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு தலைவணங்குகிறேன்.
மெக்கல்லம்: (நியூசிலாந்து)
கிரிக்கெட்டில் அவருக்கு நிகர் அவரே ஆவார்.
யுவராஜ் சிங்: (இந்தியா)
கிரிக்கெட்டின் லெஜண்ட். தலைசிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர். உங்களது சிறப்பான பந்துவீச்சும் ஆக்ரோஷமான பந்துவீச்சு முறையும் எப்போதும் மறக்கமுடியாது. உங்களது எதிர்காலம் நல்ல படியாக அமையட்டும்.
ஷேன் வார்னே: (ஆஸ்திரேலியா)
உங்களது கிரிக்கெட் பயணத்துக்கு வாழ்த்துகள் ஸ்டெயின். உங்களது பந்துவீச்சின் மூலம் எங்களை மகிழ்வித்தீர்கள். நீங்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் மோசமாகதான் இருக்கும்.
பிரெண்டன் டெய்லர்: (ஜிம்பாப்வே)
உங்களது ஓய்வு செய்தி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், லட்சக்கணக்கான ரசிகர்களை போல நானும் உங்களது கிரிக்கெட் பயணத்தை கொண்டாடுவேன். களத்தில் கடுமையான போட்டியாளர், வெளியில் அற்புதமான மனிதர்.
இன்னும் பல வீரர்கள் தங்களது வாழ்த்துகளை ஸ்டெயினிற்கு தெரிவித்துவருகின்றனர்.