தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் தொடக்கவீரர்கள் டேவிட் வார்னர் 4 ரன்களிலும், கேப்டன் பின்ச் 22 ரன்னிலும், ஸ்மித் 20 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசானே - ஆர்சி ஷார்ட் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய லபுசானே சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 254 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்னஸ் லபுசானே 108 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நொர்ஜே, ஸ்மட்ஸ் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டி காக் 26 ரன்களிலும், மாலன் 23 ரன்களிலும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸ், கைல் வெர்ரெய்ன் சிறப்பாக அரை சதமடித்து அசத்தினர். இதில் வெர்ரெய்ன் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் வெற்றி இலக்கையடைந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜேஜே ஸ்மட்ஸ் ஆட்டநாயகனாகவும், இத்தொடர் முழுதும் அதிரடியாக விளையாடிய கிளாசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் கால்பந்து: மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி!