தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடிவருகிறது.
இதில், டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசன் சதத்தால் 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது.
ஹென்ரிச் கிளாசன் 114 பந்துகளில் ஏழு பவுண்டரி, மூன்று சிக்சர் உட்பட 123 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.

ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அவருக்கு பக்கபலமாக விளையாடிய டேவிட் மில்லர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெட் கம்மின்ஸ் மூன்று, மிட்சல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 292 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் (71), மார்னஸ் லபுசானே (41) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி மூன்று, அன்ரிச் நோர்டே, ஷாம்சி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால், தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இப்போட்டியில் சதம் விளாசி தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 4ஆம் தேதி ப்லோம்ஃபோன்டைன் நகரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தை 92 ரன்களை சேஸ் செய்ய விடாமல் மிரட்டிய நியூசிலாந்து!