வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின்மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொலார்டு கேப்டன்டாக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் 42.4 ஓவரில் 191 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த மூன்று ரன்களுக்கு நான்கு விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ரஹ்மத் ஷா 61, இக்ரம் அலி 58 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் இரண்டு, ரொமாரியோ ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 195 ரன்கள் இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47ஆவது ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதில் எட்டியது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம், கேப்டனான முதல் போட்டியிலேயே பொலார்டு வெற்றியைக் கண்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இரண்டு விக்கெட்கள், 94 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:ஜாம்பவான்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் 'கடைசி தலைமுறை ஃபாஸ்ட் பவுலர் கர்ட்லி அம்ப்ரோஸ்'