சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுவரும் சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற வாழ்வா சாவா ஆட்டத்தில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பீட்டர்சன், முஸ்டார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இப்போட்டியில் 38 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பீட்டர்சன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த முஸ்டார்ட் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய ஓவைஸ் ஷாவும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக முஸ்டார்ட் 57 ரன்களையும், ஓவைஸ் ஷா 53 ரன்களையும் சேர்த்தனர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, டுவைன் ஸ்மித் - நர்சிங் தியோனரின் இணை அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி, இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் பலபரீட்சை நடத்துக்கிறது. ராய்பூரில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இதையும் படிங்க: Ind vs Eng: பட்லர் அதிரடியில் மண்ணைக் கவ்விய இந்தியா!