தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக விக்கெட் கீப்பராக செயல்படுபவர் இளம் வீரர் ரிஷப் பண்ட். இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜமைக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடிவருகிறார்.
இப்போட்டியில் 468 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 45 ரன்களை எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான கிரைக் பிராத்வெயிட், இஷாந்த் ஷர்மாவின் பந்துவீ்ச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் தந்து மூன்று ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 50 டிஸ்மிசல் (கேட்ச், ஸ்டெம்பிங்) செய்த தோனியின் சாதனை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். தோனி இச்சாதனை படைக்க 15 டெஸ்ட் போட்டிகள் எடுத்துகொண்ட நிலையில், ரிஷப் பண்ட் 11ஆவது போட்டியிலே இதனை எட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, குறைந்த போட்டிகளில் 50 டிஸ்மிசல் செய்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் இவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட் உடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தோனி 294 டிஸ்மிசல்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.