டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை 70 போட்டிகளில் ஆடி 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
2017ஆம் ஆண்டில் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக பங்கேற்று 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதையடுத்து 2019ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக களமிறங்கி 34 விக்கெட்டுகளும், 339 ரன்களும் எடுத்து அபாயகர வீரராக வலம்வந்தார்.
இதையடுத்து இந்த ஆண்டில் யார்க்ஷைர் அணிக்காக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''யார்க்ஷைர் அணிக்காக களமிறங்குவதற்கு ஆர்வமாக உள்ளேன். மிகவும் பாரம்பரியமான, கவுண்டி கிரிக்கெட்டில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட அணி யார்க்ஷைர். அந்த அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே எனது தேவை நிச்சயம் சுழற்பந்துவீச்சை வலிமைப்படுத்துவதற்காக தான்.
யார்க்ஷைர் அணிக்காக முதல் வெளிநாட்டு வீரராக சச்சின் டெண்டுல்கர் ஆடினார். அவருடைய தடங்களைப் பின்பற்றி, யார்க்ஷைர் அணிக்கு ஆடப்போவது பெருமையாக உள்ளது'' என்றார்.
இதுகுறித்து யார்க்ஷையர் அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ கேல் பேசுகையில், ''கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிதி பிரச்னையிலிருந்து யார்க்ஷையர் அணி இந்த ஆண்டு மீண்டுள்ளது. இதனால் அதிகமான இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்துவருகிறோம். டேவிட் மாலன், டி20 வகை போட்டிகளுக்காக நிக்கோலஸ் பூரான், அனைத்து வகையான போட்டிகளுக்காக அஸ்வின் ஆகியோரை ஒப்பந்தம் செய்துவருகிறோம்.
இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு பின் யார்க்ஷையர் அணிக்காக அஸ்வின் ஆடவுள்ளார். குறுகிய கால வீரர்களின் ஒப்பந்தங்கள் யார்க்ஷையர் அணிக்கு இதுவரை ஒத்துவரவில்லை. நீண்ட நாள் ஒப்பந்தங்களில் ஆடும் வீரர்கள் யார்கஹையர் அணிக்கு தேவை.
கடந்த ஆண்டு மகாராஜ் சிறப்பாக ஆடினார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார். அவருக்கு சிறந்த மாற்றாக அஸ்வின் இருப்பார். கடந்த ஆண்டு நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உள்ள அஸ்வின், யார்க்ஷையர் அணிக்கு சிறந்த பங்களிப்பார்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிசிசிஐ புதிய ஒப்பந்தத்தில் தோனி இல்லை - ரசிகர்கள் அதிர்ச்சி