உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு, இனி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் பொறுப்பு வகிப்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. தனது மாயாஜால சுழற்பந்துவீச்சின் மூலம் அவர் இளம் வயதிலேயே அனைவரது பாராட்டுகளையும் பெற்று, முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இருப்பினும், இளம் வயதிலேயே அவருக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இத்தகைய பொறுப்பை அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டியில் ரஷித் கான் கிரிக்கெட்டில் பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டியில் கேப்டனாக களமிறங்கினார்.
இதன்மூலம், இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 20 வயது 350 நாட்களில் அவர் இதனை எட்டியுள்ளார். இதனால், 15 ஆண்டுகளுக்கு முன் ஜிம்பாப்வே வீரர் தைபு 20 வயது 358 நாளில் படைத்திருந்த சாதனையை ரஷித் கான் எட்டு நாட்கள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.
2004இல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஜிம்பாப்வே வீரர் தைபு இச்சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷித் கானின் சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் இனி ஒரு வீரர் பிறந்துதான் வர வேண்டும் போல.
இளம் வயதில் கேப்டனாக பதவி ஏற்ற வீரர்கள்
- ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 20 வயது, 350 நாள்
- தைபு (ஜிம்பாப்வே) - 20 வயது, 358 நாள்
- நவாப் ஆஃப் பட்டோடி (இந்தியா) - 21 வயது 77 நாள்
- வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) - 22 வயது 15 நாள்
- க்ரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா) - 22 வயது 82 நாள்
- ஷகிப்-உல்-ஹசன் (வங்கதேசம்) - 22 வயது 115 நாள்