இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தற்போது பல்வேறு நகரங்களில் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை - பரோடா அணிகளுக்கு இடையிலான போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களில் 431 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஷாம்ஸ் முலானி 89, ரஹானே 79, பிரித்வி ஷா 66 ரன்களை எடுத்தனர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பரோடா அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதர் தேவ்தார் 160 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் ஷாம்ஸ் முலானி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, 124 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 179 பந்துகளில் 19 பவுண்டரி, ஏழு சிக்சர் என 202 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் தரப் போட்டியில் அவர் அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும்.
முன்னதாக, ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கி ஆறு மாதத் தடைக்குப் பிறகு, அவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், முதல் தரப் போட்டியில் அவர் அடித்த இந்த இரட்டை சதம் தான், அவரது சிறந்த கம்பேக்காக பார்க்கப்படுகிறது.
பிரித்வி ஷாவின் அதிரடியால் மும்பை அணி 66.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து, 409 ரன்களைக் குவித்த போது டிக்ளேர் செய்தது. மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 534 ரன்கள் என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் பராடோ அணி, மூன்றாம் ஆட்டநாள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:
மூன்றாவது டி20: வெ. இண்டீஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்!