ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனுக்கான போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், 48 வயதான இந்திய வீரர் பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இவரால் பங்கேற்க முடியாது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிப்பதாவது,
"பிசிசிஐயின் விதிமுறைப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்கள் யாரும் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாடக்கூடாது. ஆனால், கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற டி10 லீக்கில் பங்கேற்ற பிரவின் தாம்பே, தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடவிருப்பது பிசிசிஐயின் விதிகளுக்கு முற்றிலும் முரணான செயலாகும். இதனால், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.
லெக் ஸ்பின்னரான இவர், 2011 ஐபிஎல் தொடரில் தனது 41ஆவது வயதில்தான் அறிமுகமானார். ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை 33 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனியைப் போல் ஆட்டங்களை முடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்: ஆஸ்திரேலிய துணை கேப்டன்!