கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இப்பெருந்தொற்றால் இம்மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்குலம், பிரபல விளையாட்டு வானொலி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் அது ஐபிஎல் தொடரை நடத்த வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்குலம் கூறுகையில், ’என்னைப் பொறுத்த வரை இந்தாண்டு டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுவது சந்தேகம் என்றே கூறுவேன். மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தினால் 16 அணிகளையும் இணைத்து, பார்வையாளர்களின்றி தொடரை நடத்த இயலாது. அதேபோல் எனக்கும் கூட உலகக்கோப்பைத் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறுவது பிடிக்கவில்லை.
அதனால் உலகக்கோப்பைத் தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதன் மூலமாக பார்வையாளர்களுடன் கூடிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. ஒருவேளை டி20 உலககக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அது ஐபிஎல் தொடரையும் நடத்த வழிவகை செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், உலகக்கோப்பைத் தொடர் ஒன்று அல்லது அதற்கு மேலாகவும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்படுவதற்கு சாத்தியமுண்டு’ - ஆரோன் ஃபின்ச்