கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலினால் பல நாடுகள் கடுமையான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் முழு ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒலிம்பிக், ஐபிஎல், ஐரோப்பிய கோப்பை, பிரஞ்சு ஓபன் உள்ளிட்ட முக்கியத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கும் இங்கிலாந்தில் தற்போது, கடுமையான விதிமுறைகளுடன் விளையாட்டு வீரர்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் அளித்து, வீரர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் நேரலையில், காணொலிக் காட்சி மூலம் இணைந்தனர். அப்போது பிராட், ஆண்டர்சனிடம் தற்போது இங்கிலாந்து அரசாங்கம் ஊரடங்கில் செய்துள்ள தளர்வுகள் குறித்து கேள்வியெழுப்பினார்.
பிராடின் கேள்விக்குப் பதிலளித்த ஆண்டர்சன், ”தற்போது விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை, பார்வையாளர்களின்றி நடத்துவது வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் போட்டியானது கவுண்டி கிரிக்கெட் போட்டியை ஒத்ததாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சாத்தியமில்லை - கங்குலி!