கோவிட்-19 பெருந்தொற்றால் உலகில் அனைத்து விதமான விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐபிஎல் உள்ளிட்ட உள்ளூர் தொடர்கள் முதற்கொண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் நிதி நெருக்கடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்வையாளர்களின்றி போட்டிகளை நடத்தலாம் என்ற திட்டத்தை ஐசிசி செயல்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஐசிசியின் இந்த முடிவிற்கு பல்வேறு வீரர்களும், தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனது சமூக வலைதள நேரலையின் போது, பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில் பேசிய அக்தர், ‘பார்வையாளர்களின்றி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது கிரிக்கெட் வாரியங்களுக்கு வேண்டுமானால் பலனை அளிக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது முட்டாள் தனமானது.
இன்னும் சொல்ல போனால், பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் போட்டியானது, மணமகள் இல்லாமல் நடைபெறும் திருமணத்திற்குச் சமமானது. ஏனெனில், இது வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் போட்டியானது, ரசிகர்ளுடன் விளையாடும் போட்டிகளைப் போன்ற உற்சாகத்தை தராது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லாக் டவுன் நாள்களிலும் பிசியாக இருக்கும் ஜெமீமா ரோட்ரிக்ஸ்...!