இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இன்று வரையிலும் அந்த சாதனை முறியடிக்கப்படாமலே உள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் வீரர்கள் பங்கேற்றிருந்த உரையாடல் நிகழ்ச்சியில், வரும் காலங்களில் கிரிக்கெட்டில் படைக்கவுள்ள சாதனைகள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.
அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், '' சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் வீரராக நிச்சயம் கோலி இருப்பார். அதைப்பற்றி கோலி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த சாதனையை அவர் முறியடிப்பார்.
அதுபோன்ற பெரும் சாதனையைப் படைக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஃபிட்னெஸும், திறனும், டெக்னிக்கும் முக்கியம். அது அனைத்தும் கோலியிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக நிச்சயம் அந்த சாதனையை தன் பெயரில் கோலி எழுதுவார்'' என பேசியுள்ளார்.
கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோனி தனித்திறன் படைத்தவர்; அரிதான ஒருவர் - சவுரவ் கங்குலி!