இந்திய கிரிக்கெட்டின் சமீபத்திய பேசுபொருளாக இருக்கக்கூடியவர் இளம் வீரர் ரிஷப் பந்த். ஏனெனில் தோனிக்குப்பின் அவரது இடத்தை நிரப்ப வேண்டும் என்று எண்ணிய பிசிசிஐ ரிஷப் பந்திற்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தது. ஆனால் அதில் அவர் சோபிக்கத் தவறியதால் அந்த வாய்ப்பு தற்போது கே.எல். ராகுல் வசம் சென்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல். ராகுல், பேட்டிங்கிலும் அசத்திவருகிறார். இதனால் ரிஷப் பந்த்தின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன.
இதனிடையே ட்விட்டர்வாசி ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான் ரிக்கி பாண்டிங்கிடம், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் ரிஷப் பந்த் தனது இடத்தை இழந்துள்ளார். இது குறித்து உங்களது கருத்துகளைக் கூறுங்கள் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பாண்டிங், இளம் வீரரான ரிஷப் பந்திடம் அதிகப்படியான திறமைகள் இருக்கின்றன. நான் அவருடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவர் கூடிய விரைவில் இந்திய அணியில் மீண்டும் நிச்சயமாக இடம்பிடிப்பார் எனப் பதிவிட்டிருந்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ரிஷப் பந்த் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க இந்த வருட ஐபிஎல் தொடர் அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கில்கிறிஸ்ட்டின் சாதனையை உடைத்த டி காக்