வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2 டெஸ்ட், 15 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர் ஒட்டிஸ் கிப்சன். இவர் 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும், 2015-2017 ஆகிய வருடங்களில் இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்தார். இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளில் அபார வளர்ச்சி ஏற்பட்டது.
அதையடுத்து 2017-2019ஆம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தற்போது வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் தலைமை இயக்குநர் நிஸாமுதின் சவுத்ரி பேசுகையில், ''வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒட்டிஸ் கிப்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சர்வதேச அணிகளுகடனான அனுபவம் வங்கதேச அணிக்கு வலுசேர்க்கும். அவரது நியமனம், நிச்சயம் பயிற்சியாளர்கள் குழுவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்றார்.
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த லாங்வெல்ட்டின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெற்ற நிலையில், கிப்சன் அந்த இடத்திற்கு வந்துள்ளார். சில நாள்களுக்கு முன்னதாக நடந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் காமிலா வாரியர்ஸ் (cumilla warriors) அணியின் பயிற்சியாளராக கிப்சன் இருந்தார். அந்த அணி வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. கிப்சனின் செயல்பாடுகள் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு திருப்தியளித்ததன் காரணமாக கிப்சன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் - ஜெர்மன் வீரர்