கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவாக இருக்கும். அதுவும் அந்த கனவு உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நிறைவேறினால் பந்துவீச்சாளருக்கு கூடுதல் ஸ்பெஷலாகவே இருக்கும்.
அந்த வகையில் உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்தியாவின் சேத்தன் சர்மா 1987ல் படைத்தார்.
அதன்பின் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
1999 உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 271 ரன்களை குவித்தது.
அதன் பின், 272 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 40 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்திருந்தது.
இந்தச் சூழலில் 41ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் சக்லைன் முஸ்தாக், ஹென்றி ஹொலங்கா, ஆடம் ஹக்கில், போலியோ பங்வா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்.
முன்னதாக 1996இல் பெஷாவரில் நடைபெற்ற போட்டியில் இதே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் எடுத்திருந்தார். இவரின் உதவியால் பாகிஸ்தான் அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் அபார வெற்றி பெற்றது.