1992க்கு பிறகு 2015இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அதுவரை அந்த தொடரில் ஒரு தோல்வியையும் தழுவாமல் இருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
2015, மார்ச் 26 சிட்னியில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. 48 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில், 50 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கினர். மேலும் இப்போட்டி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நிச்சயம் இந்திய அணி சிட்னியில் வெற்றிபெறும் என கூறப்பட்டது.

ஆனால், சிட்னி மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம். ஏனெனில், இந்த மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 போட்டிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு முறை மட்டுமே இந்தியா வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மற்ற 12 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.
இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கல் கிளார்க் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். சிட்னி மைதானத்தின் ராசியும், டாஸ் வென்றதையும் வைத்து பார்த்தால் ஆட்டத்தின் தொடக்கமே ஆஸி.க்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் இருந்தது.

வார்னர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஃபின்ச், ஸ்டீவ் ஸ்மித் இணை ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கூறப்பட்ட சிட்னியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது சுழற்பந்துவீச்சும் பெரிதாக எடுபடவில்லை.
உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்த அதே ஃபார்மை ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆட்டத்திலும் கடைபிடித்தார். அதன்பலனாக அவர் அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசினார். 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 105 ரன்களுடன் அவர் வெளியேற ஆஸ்திரேலிய அணி 34.1 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில், நிதானமாக விளையாடிய ஃபின்ச் 81 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதன்பிறகு வாட்சன், கிளார்க் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஆட்டத்தின் இறுதியில் ஃபாக்னரும், மிட்சல் ஜான்சனும் அதிரடியாக விளையாட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 328 ரன்களைச் சேர்த்தது. அந்தத் தொடரில் அதுவரை விளையாடிய அனைத்து அணிகளையும் ஆல் அவுட் செய்துவந்த இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் செய்யாமல் போனது. இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் விதமாக உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுகளை எடுத்தார். பெரிதும் எதிர்பார்த்த முகமது ஷமி விக்கெட் எடுக்காமல் சொதப்பினார்.

இதையடுத்து, 330 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 12.5 ஓவர்களில் 76 ரன்கள் இருந்தபோது தவான் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கோலி மூன்றாவது வரிசையில் களமிறங்கினார். சேஸிங்கில் இதுபோன்ற பலமுறை இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற கோலி இப்போட்டியிலும் இந்திய அணியை வெற்றிபெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரோ ஒரு ரன்னோடு ஜான்சன் பந்துவீச்சில் வெளியேற இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டது. கோலியைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், தோனி - ரஹானே இணை பொறுப்புடன் விளையாடியது. இருப்பினும் இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன் ரேட் 10க்கும் அதிகமாக இருந்தன.

இந்த நிலையில், ரஹானே 44 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அஸ்வின் ஐந்து ரன்களில் போல்டானார். இருப்பினும் தோனி களத்தில் இருந்ததால், ஆட்டம் இன்னும் முடியவில்லை என்ற நம்பிக்கையோடு இந்திய ரசிகர்கள் இருந்தனர். எட்டு ஓவர்களில் 112 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி வாட்சனின் பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார். இதையடுத்து, இந்திய அணியின் வெற்றிக்கு 109 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் தோனி 65 பந்துகளில் 65 ரன்களோடு ரன் அவுட்டானார். அதில், மூன்று பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.

தோனி ரன் அவுட்டானவுடன் இந்திய அணியின் தோல்வி உறுதிசெய்யப்பட்டதால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமூச்சை விட்டனர். இறுதியில், இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அதன்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இப்போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த ஓப்பனிங்கை வைத்து பார்த்தால் நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், 330 ரன்கள் சேஸிங் என்ற பிரஷரால் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. ஷிகர் தவான் - ரோஹித் ஓப்பனிங், தோனியின் அரைசதம், உமேஷ் யாதவின் பவுலிங் இவற்றை தவிர இப்போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை.

கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி ரன் அவுட்டால், எப்படி இந்திய அணியின் கனவு கலைந்ததோ அதேபோன்றுதான் 2015 உலகக்கோப்பை தொடரிலும் கலைந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையும் படிங்க: உலகை திரும்பி பார்க்க வைத்த பாகிஸ்தான்... 1992 உலகக்கோப்பை ரீவைண்ட்!