டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றபின் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துவருபவர் விருத்திமன் சாஹா. இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று சதம், ஐந்து அரைசதம் உட்பட ஆயிரத்த 238 ரன்களை எடுத்துள்ளார்.
சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது சாஹாவின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் தற்போது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிவருகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்து முடிந்த லீக் ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது
இதனிடையே, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், சாஹாவை உடற்தகுதியுடன் இருக்கமாறும், டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி தொடரின் அடுத்த போட்டியில் பங்கேற்க வேண்டாம் எனவும் பிசிசிஐ அவரிடம் கேட்டுக்கொண்டது.
இதன்மூலம், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாஹா நிச்சயம் இடம்பிடிப்பார் என தெரிகிறது. முன்னதாக, விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவான் இடத்தை பிடித்த பிரித்விஷா, சஞ்சு சாம்சன்!