நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணியும், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியும் முழுமையாகக் கைப்பற்றின. இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.
வெலிங்டன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே பிரித்வி ஷா (16) விக்கெட்டை இழந்தது. அவரைத் தொடர்ந்து புஜாரா 11 ரன்களிலும், கோலி 2 ரன்களிலும் அறிமுக வீரர் கைல் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 40 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை மயாங்க் அகர்வால் - ரகானே இணை நிதான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டது. இந்திய அணி உணவு இடைவேளை வரை 28 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்திருந்தது.
அதன்பின் ஆட்டம் தொடங்கியபோது மயாங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் 7 ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி மீண்டும் தடுமாறத் தொடங்கியது. தற்போது ரகானே, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங் செய்துவருகின்றனர். நியூசிலாந்து பந்துவீச்சில் கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்டுகளையும், சவுத்தீ, போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.