கங்குலியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணிக்குள் நுழைந்த சில இளம் வீரர்கள் பிற்காலத்தில் ரசிகர்களின் ஃபேவரைட் வீரர்களாக வலம் வந்தனர். அந்த லிஸ்டில் யுவராஜ் சிங் தவிர்க்க முடியாத வீரர். தென் ஆப்பிரிக்காவின் ஃபீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸின் சமகாலத்தில் இவர் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
இடது கை வீரரான இவர் ஃபீல்டிங் மட்டுமின்றி பேட்டிங், பவுலிங் என அனைத்து அம்சங்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.
தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். குறிப்பாக 2007இல் டி20 உலகக்கோப்பை தொடரையும், 2011இல் உலகக்கோப்பை ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்ல யுவராஜ் சிங் முதன்மை காரணமாக இருந்தார்.
இந்திய அணிக்காக 304 ஒருநாள், 40 டெஸ்ட், 58 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் பேட்டிங்கில் மொத்தம் 11,778 ரன்களும், பவுலிங்கில் 148 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் இவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் மிஸ் யூ யுவி ஹேஷ்டேக்கை (#MissYouYuvi) ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவி ஓய்வு பெற்றிருந்தாலும், 2002 நாட்வெஸ்ட் தொடர், 2007டி20 உலகக் கோப்பையில் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர், புற்றுநோயையும் பொருட்படுத்தாமல் 2011இல் இந்திய அணிக்காக உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது போன்று பல்வேறு மறக்க முடியாத தருணங்களை ரசிகர்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்.