விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில், முதலில் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றுவருகிறது.
ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்ததால், உரிய நேரத்தில் போட்டி தொடங்கவில்லை. இதைத்தொடர்ந்து, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார். டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பதிலாக ரோகித் ஷர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ் ஆகிய மூன்று பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஒன்பது ரன்களை எடுத்தபோது, மழை பெய்தது. இதனால், ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கெயில் மூன்று ரன்களிலும், லீவிஸ் நான்கு ரன்களிலும் களத்தில் இருக்கின்றனர்.
இப்போட்டியில் கெயில் இன்னும் எட்டு ரன்கள் எடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்களை அடித்த முன்னாள் கேப்டன் லாராவின் சாதனையை முறியடிப்பார்.
இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், கலீல் அஹமது.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), எவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரான், ஷிம்ரான் ஹெட்மயர், ரோஸ்டான் சேஸ், கார்லோஸ் பிராத்வெயிட், ஃபெபியன் ஆலென், ஷெல்டான் காட்ரல், கீமார் ரோச்