ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அறிமுக வீரர் நடராஜனின் அபார பந்துவீச்சினால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் மேத்யூ வேட், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கினார். இதையடுத்து ஆட்டத்தின் நான்காவது ஓவரை வீச வந்த நடராஜன் முதல் ஓவரிலேயே டி ஆர்சி ஷார்ட்டின் விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் ரன்வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டார்.
ஆனால் மறுமுனையில் பந்துவீச வந்த சஹால், தீபக் சஹார், ஷர்தூல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துகளை பாரபட்சம் பார்க்காமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெளுத்துவாங்கினர். ஆனால் தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஆஸ்திரேலியர்களின் ரன்வேட்டைக்கு நடராஜன் தடையாக அமைந்தார்.
பின்னர் 19ஆவது ஓவரை வீசிய நடராஜன், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஃபார்மிலிருந்த ஹென்ட்ரிக்ஸை வெளியேற்றி அசத்தினார். இறுதியாக நான்கு ஓவர்களை வீசிய நடராஜன் 20 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
பின்னர் இந்திய அணி தனது இன்னிங்ஸில் ஷிகர் தவான், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரது அபாரமான பேட்டிங்கால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருதை பெற்ற பின் பேசிய ஹர்திக் பாண்டியா, ”இந்த ஆட்டநாயகன் விருது உண்மையில் நடராஜனுக்கு சேர வேண்டியது. ஏனெனில் நடராஜன் தனது பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் நாங்கள் இப்போட்டியை நிச்சயம் இழந்திருப்போம். அதனால் அவர்தான் இந்த ஆட்டத்தின் நாயகன்” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இரண்டு போட்டிகளிலேயே ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நடராஜன், இந்திய அணி டி20 தொடரை கைப்பற்ற மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளார் என்றால் அது மறுப்பதற்கில்லை.
இதையும் படிங்க:IND A vs AUS A: சதமடித்து அசத்திய ரஹானே; முதல் நாள் முடிவில் இந்தியா முன்னிலை!