இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இறுதியாக இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்தான் விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்களில் தோல்வியடைந்ததையடுத்து, தோனி இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கிறார்.
அதேசமயம் உலகக்கோப்பைக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறபோவதாக பேச்சு அடிப்பட்டது. இவரது ஓய்வு குறித்து பல்வேறு வீரர்கள் பேசிவரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் தோனியின் ஓய்வுக் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது,
"தோனி தனது திறமைக்கு ஏற்ப இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு கண்ணியத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் தன் ஓய்வை இழுத்து அடிக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.
ஒருவேளை நான் அவரது இடத்தில் இருந்திருந்தால் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன். நான் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியிருக்கலாம். ஆனால் 2011 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு நான் ஓய்வு அறிவித்ததற்கு முக்கிய காரணம் என்னால் 100 விழுக்காடு விளையாட முடியவில்லை.
ஒரு நாடாக அவருக்கு மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அவரை வழி அனுப்பி வைக்க வேண்டும். உங்களுக்காக அவர் உலகக்கோப்பை வென்றுத்தந்துள்ளார். மேலும் இந்தியாவுக்காக பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். நல்ல மனிதராகவும் இருக்கிறார். ஆனால் தற்போது அவரை ஏதோ தடுக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவரால் ஆட்டத்தை ஃபினிஷ் செய்யமுடிவில்லை என தெரிந்த பிறகு அவர் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன். ஆனால் ஏன் ஓய்வு முடிவு அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகுகூட தனக்காக ஒரு ஃபேர்வெல் தொடரில் விளையாடியிருக்கலாம். அப்படி விளையாடி விடைபெற்றிருந்தால் அது அவரது ஆளுமைக்கு உகந்ததாக இருந்திருக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: தோனிக்கு கடமைப்பட்டுள்ளேன் - வாட்சன்