இந்தூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில், இந்திய அணி தரப்பில் பந்துவீச்சாளர் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனால், இன்று வெளியான ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், 15ஆவது இடத்திலிருந்த அவர் தற்போது எட்டு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இவர் முதல்முறையாக டாப் 10க்குள் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், இப்பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொடர்ந்து 10ஆவது இடத்திலேயே உள்ளார்.
அவரைத் தவிர, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி 20ஆவது இடத்தையும், 22ஆவது இடத்தையும் பிடித்தனர். இப்பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா நான்காவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'கெளதம் காம்பீரைக் காணோம்' - போஸ்டரால் பரபரப்பு!