2006ஆம் ஆண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றது ஆஸ்திரேலிய அணி. முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் உள்ளன. ஐந்தாவது போட்டியில் தான் கோப்பை யாருடைய கைகளில் இருக்கும் என தெரியவரும். சொந்த மண்ணில் கோப்பையை விட்டுவிடக் கூடாது என தென் ஆப்பிரிக்காவும், கோப்பையை எதிரணியின் சொந்த மண்ணில் வைத்து கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் தயாராகின.
போட்டி நடப்பதற்கு முதல்நாள் இரவு...
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் ஒரே ஹோட்டலில் தான் தங்குமிடம் வழங்கப்பட்டிருந்தது. அடுத்தநாள் போட்டிக்காக வேகமாக எழுந்திருக்க வேண்டும் என்பதால் இரு அணி வீரர்களும் நேரத்துடனே உணவருந்த சென்றுவிட்டார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் கிப்ஸ் மட்டும் பாரில் பீருடன் அமர்ந்திருந்திருக்கிறார். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் கிப்ஸைப் பார்த்த மைக் ஹசிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி ஆகியும் கிப்ஸ் பாரை விட்டு நகரவில்லை. ஹசி தூங்குவதற்கு முன்னதாக மீண்டும் கிப்ஸை பார்த்திருக்கிறார்.
அடுத்தநாள் காலை: கிப்ஸ் முதல்நாள் இரவு போதையிலிருந்தே வெளிவராத காரணத்தினால் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், கிப்ஸை நீக்குவதற்கு ஆலோசனை நடத்தியபோது, மாற்று வீரருக்கு சரியான பேட்ஸ்மேன் கிடைக்காததால் கிப்ஸையே களமிறக்க வேண்டிய நிலை. அடுத்த தொடரில் நிச்சயம் உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் ஸ்மித் கிப்ஸை களமிறக்கியுள்ளார். ஆட்டம் தொடங்குகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் மைதானத்தைப் பார்த்த குஷியில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியாவின் கேடிச் - கில்கிறிஸ்ட் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளது. தொடக்கத்தில் நிதானமாகவே ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அந்த நிதானம் எல்லாம் ராட்ச்சசன் பாண்டிங் களமிறங்கும் வரையில் தான். பாண்டிங் களமிறங்கியது முதல் பவுண்டரிகள் அதிகமாக செல்கிறது. 30 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களைக் கடக்கிறது.
பின்னர் கேடிச் 90 பந்துகளில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறுகிறார். கிளார்க், சைமண்ட்ஸ் ஆகியோருக்கு பதிலாக மைக் ஹசி களமிறங்குகிறார். இடது - வலது காம்பினேஷனில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிதறடிக்கிறார்கள்.
ஆட்டத்தினிடையே பவுச்சரிடம் 400 ரன்களை ஆஸ்திரேலிய அணி கடந்துவிடுமோ என ஸ்மித் கேட்டபோது, அதற்கு வாய்ப்பே இல்லை என பவுச்சர் பதிலளித்திருக்கிறார். ஆனால் பாண்டிங் அடித்த அடியில் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 300 ரன்களைக் கடக்கிறது.
300 ரன்களைக் கடந்தபின் பாண்டிங் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு ருத்ர தாண்டவம் என்றால் என்ன என்பதை கண்களில் காட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் இரண்டு சிக்சர் சென்றதை என்பதை ரசிகர்கள் கண்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 48ஆவது ஓவரில் 400 ரன்களைக் கடந்தபோது பாண்டிங் 105 பந்துகளில் 164 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 434 ரன்களை குவிக்கிறது.
அடுத்த 30 நிமிடங்களில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் கனவில் கூட விரட்ட நினைக்காத ஸ்கோரை விரட்ட வேண்டும். பயிற்சியாளர், கேப்டன், பந்துவீச்சாளர்கள் என அனைவரும் அமையாக இருக்கிறார்கள். காலிஸ் மட்டும் முன்வந்து, ''பந்துவீச்சாளர்கள் அவர்களின் வேலையை சரியாக முடித்துவிட்டார்கள். 15 முதல் 20 ரன்கள் குறைவாக எதிரணி எடுத்துள்ளது'' எனக் கூறியபோது ட்ரெஸ்ஸிங் ரூம் முழுக்க சிரிப்பலை எழுகிறது.
மிகவும் இருக்கமான சூழலில் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர்களை ஒரு சிறிய ஜோக் மூலம் காலிஸ் வெளிக்கொண்டு வர, தென் ஆப்பிரிக்க அணி யாரும் காண்டிராத கனவை நினைவாக்க தயாராகிறது.
கேப்டன் ஸ்மித் - டிப்பன்னர் இணை தொடக்கம் கொடுக்கிறார்கள். டிப்பன்னர் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற, கிப்ஸ் - ச்மித் இணை ஆஸ்திரேலியர்களுக்கு ஆட்டம் காடியது. இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போல் இருவரும் பேட்டிங்கில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களை சிக்சரும், பவுண்டரியுமாய் துவம்சம் செய்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்க அணியை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என பாண்டிங் நினைத்து களத்தில் இறங்கியதற்கு நேர் எதிராக அந்த அணி 23 ஓவர்களில் 200 ரன்களைக் கடக்கிறது. கேப்டன் ஸ்மித் முன்நின்று 55 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஆட்டமிழக்கிறார். ஒருமுனையில் டி வில்லியர்ஸ், காலிஸ் ஆகியோர் வந்த வேகத்தில் சென்றாலும், மறுனுமையில் கிப்ஸ் நின்று பாண்டிங்கின் ஆட்டத்திற்கு பதிலடிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
434 ரன்களை விரட்டவே முடியாது என நினைத்த ஆஸ்திரேலிய அணியின் கண்களுக்கு முன்னால், ஒரு அணிகளின் ஸ்கோரையும் ஒப்பிட்டு பெரிய திரையில் காண்பித்தபோது, தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து 20 ரன்கள் முன்னிலையிலேயே இருக்கிறது. அன்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய ஃபீல்டர்கள் பந்துகளை விரட்டவே இல்லை. கேப்டன் பாண்டிங் தனது கால்களை தரையில் எற்றியபடியே இருந்தார்.
கிப்ஸ் 111 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்படுகிறது. கைகளில் இரண்டு விக்கெட்டுகள் மட்டும் தான் உள்ளது. பவுச்சர் - ஹால் களத்தில் இருக்கிறார்கள். இரண்டு பந்துகளில் 5 ரன்கள் எடுக்க, ஹால் விக்கெட்டைப் பறிகொடுக்கிறார். நிடினி களமிறங்கி ஒரு ரன் எடுக்க, வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்படுகிறது. லீ வீசிய பந்தை பவுச்சர் பவுண்டரிக்கு விளாசி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் யாரும் கண்டிராத கனவு வெற்றியின் ரன்களை பவுச்சர் சேர்க்கிறார்.
உலகக்கோப்பை வெற்றியைப் பெற்றிடாத தென் ஆப்பிரிக்க அணிக்கு, அந்த வெற்றி உலகக்கோப்பை வென்றதைப் போன்ற உணர்வினைக் கொடுத்ததாக பின் நாள்களில் பொல்லாக் கூறினார். அந்த வெற்றியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்களில் கண்ணீரோடு வெற்றியைக் கொண்டாடினார். இன்றைய டி20 போட்டிகளில் கிடைக்கும் உணர்வினைக் கடந்து அந்தப் போட்டி அன்றைய நாளில் ஒரு உணர்வினைக் கொடுத்தது. ஆட்டத்தைப் பார்த்த அனைவரும் ஹெலைட்ஸ் பார்த்ததுபோல் இருந்ததாக சில நாள்களுக்கு பின் கூறினார்கள். உண்மை என்னவென்றால் அந்த போட்டியை ஹைலைட்ஸ் பார்க்கவேண்டும் என்றால், முழுமையாக தான் பார்க்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்க அணி 434 ரன்களை வெற்றிகரமாக எடுத்து ஒன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதையும் படிங்க: இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers