இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி (மூன்றாவது) ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதில் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கிறிஸ் கெயில் 72, எவின் லீவிஸ் 43 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் கலீல் அஹமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 32.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதனால், இந்திய அணி இப்போட்டியில், 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து ஒன்பது ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியுள்ளது. அதில், நான்கு முறை வெஸ்ட் இண்டீஸிலும், ஐந்துமுறை இந்தியாவிலும் வென்றுள்ளது.

இப்போட்டியில், தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டியில் தனது 43ஆவது சதத்தை பூர்த்தி செய்த கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதுமட்டுமின்றி, இந்தத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்ததற்காக அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி கோப்பை வென்ற விவரம்:
தொடர் | இடம் | ஆண்டு |
3-1 | இந்தியா | 2006/07 |
2-1 | வெஸ்ட் இண்டீஸ் | 2009 |
3-2 | வெஸ்ட் இண்டீஸ் | 2011 |
4-1 | இந்தியா | 2011/12 |
2-1 | இந்தியா | 2013/14 |
2-1 | இந்தியா | 2014/15 |
3-1 | வெஸ்ட் இண்டீஸ் | 2017 |
3-1 | இந்தியா | 2018/19 |
2-0 | வெஸ்ட் இண்டீஸ் | 2019 |